ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினின் உயிருடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுக்ரைனின் உள்விவகார அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோவின் ஆலோசகரால் வெளியிடப்பட்ட பிரிகோஜினின் வீடியோ, வாக்னர் தலைவரின் இறுதிச் சடங்குகள் இடம்பெற் சில நாட்களுக்குப் பிறகு அவரது மரணம் பற்றிய கூற்றுக்களை மறுத்துள்ளது.
‘நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா, நான் எப்படி இருக்கிறேன் என்று சிலர் விவாதித்து வருகிறார்கள். நான் இப்போது ஒகஸ்ட் 2023 பிற்பகுதியில் ஆப்பிரிக்காவில் இருக்கிறேன். என்னை அழிக்கச் சிலர் நினைக்கிறார்கள். என்னை முற்றிலுமாக அழிக்கவே விரும்புகிறார்கள். எல்லாம் சரி தான். பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
26 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் அவர் ரஷ்ய மொழியில் பேசியுள்ளார். வீடியோவில் இறுதியில் அவர் கெமராவை நோக்கி கையசைத்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் இடம் என்பன இதுவரையில் சரிபார்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு வடக்கே ஒரு விமான விபத்தில் பிரிகோஜின் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.