இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரண தோற்பட்டை உபாதை காரணமாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் எமது இணையத்தளத்துக்கு கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்த மதீஷ பதிரண அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து போட்டிகளில் விளையாடவில்லை.
இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகிவிடுவார் என இலங்கை அணி நிர்வாகம் எதிர்பார்த்திருந்த போதும், அவருடைய உபாதை குணமடைவதற்கான காலம் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மிகுதி உள்ள 5 போட்டிகளிலிருந்தும் மதீஷ பதிரண நீக்கப்பட்டுள்ளார். இவர் இன்று திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைத்தந்து உபாதையிலிருந்து குணமடைவதற்கான பணிகளில் ஈடுபடுவார் என குறிப்பிடப்படடுள்ளது.
மதீஷ பதிரணவுக்கான மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படாத போதும், மேலதிக வீரராக சென்றுள்ள அனுபவ வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் பெங்களூரில் நடைபெற்ற பயிற்சிகளில் சிறந்த முறையில் பந்துவீசி வருவதன் காரணமாக சமீர அணியில் இடம்பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் அனுபவ சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் மேலதிக வீரராக அணியில் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை அணியில் உபாதைக்குள்ளாகிய மற்றுமொரு வீரர் மஹீஷ் தீக்ஷன திங்கட்கிழமை (23) நடைபெற்ற பயிற்சிகளில் ஈடுபடவில்லை. எனினும் இவருடைய உபாதை குணமடைந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என நம்பப்படுகிறது.
அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் மேலதிக வீரர்களாக உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.