NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கோப்பை கால்பந்து – அதிரடியாக ஆட்டமாடிய ஜெர்மனி – பிரேஸில்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பெண்களுக்கான 9ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள நடப்பு சம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் 5ஆவது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆக்லாந்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் இத்தாலி – அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில், மாற்று வீராங்கனையாக களம் கண்ட இத்தாலியின் கிறிஸ்டினா ஜிரெலி 87ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது. முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 2 முறை சம்பியனான ஜெர்மனி எதிர்பார்த்தது போல் 6 – 0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான மொராக்கோவை வென்றது. பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி தரப்பில் கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் 2 கோலும், கிலாரா புல், லீ ஸ்சுலெர் தலா ஒரு கோலும் அடித்தனர். மேலும் எதிரணியினரின் கவனக்குறைவு காரணமாக இரு சுயகோலும் கிடைத்தன.

அடிலெய்டில் நடந்தஇன்னொரு ஆட்டத்தில் வலுவாக கோலோச்சிய பிரேசில் 4 – 0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பனாமாவை பந்தாடியது. பிரேஸில் அணியில் ஆரிடினா போர்ஜெஸ் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்த முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையை ஆரிடினா போர்ஜெஸ் பெற்றார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா – தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து – நோர்வே அணிகள் மோதுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles