அமெரிக்காவின் – பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 41 வயதுடைய தாதியொருவர், தான் பணியாற்றிய காலத்தில் தவறான ஊசிப்போட்டு இருவரை வேண்டுமென்றே கொன்றமைக்காக கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு மே மாதம் சில நோயாளிகளுக்கு வேண்டும் என்றே தவறான ஊசி போட்டு 2 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 5க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றி இவர், மேலும் சில முதியோர் காப்பகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். அப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை ஊசி மூலம் அவர் செலுத்தி உளளதுடன், நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் கூட அவர் அந்த ஊசியை செலுத்தி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இன்சுலின் மருந்தை ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக செலுத்தும்போது இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 17 பேரை அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்;றில் முன்னிலைப்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணையில் இன்சுலின் மருந்தை வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக செலுத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு சுமார் 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.