NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நாட்கள் குறைப்பா?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்ட சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டமூலத்திற்கான பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையின் பிரகாரம் ஆட்சேர்ப்பு அல்லது பணியிடத்தில் ஒரு ஊழியருக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பணியாளர்கள், அனைத்து பணியிட துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு 5 நாட்கள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்துதல், பகுதிநேர வேலையில் ஈடுபடுவதற்கு தொடர்புடைய சட்ட விதிகளை உருவாக்குதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இரவில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம், தந்தைவழி விடுப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்தக் குறிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொழிலாளர் சட்ட மாதிரி, தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சட்டமாக்கப்படும் என அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

Share:

Related Articles