NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஜனநாயகத்திற்கான சிவில் சமூக கூட்டமைப்பின் அழைப்பு   

“ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு” ஆனது ஜனநாயகத்திற்காக உறுதுணையாய் நிற்பது என்பதனால் அறியப்படுகிறது. அதனடிப்படையில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய செல்வாக்காளர்கள் என பலர் இணைந்து எமது நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் (Sri Lanka Foundation Institute) ஒன்று கூடினர். உண்மையான மற்றும் சமமான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் அடக்குமுறையை நிறுத்தவும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, கருத்து வேறுபாட்டு உரிமை, போராட்ட அல்லது எதிர்ப்பதற்கான உரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை போன்ற அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறை தொடர்பில் ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பானது தீவிர கரிசனையினை செலுத்தி வருகிறது. மேலும், எதிர் அரசியல் கட்சியினர், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் வகையில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) மற்றும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் (UNHRC) விதிகளையும் ஆட்சியாளர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு ஆணையச் சட்டம் மற்றும் அரச சார்பற்ற தன்னார்வு தொண்டு நிறுவன சட்டம் போன்ற சட்டங்களின் ஒடுக்குமுறையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அண்மைக்கால முயற்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரம் அல்லது சுயாதீனத்தினை குழிதோண்டி புதைக்க முயல்கிறது. 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ள அதேவேளை, தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் இந்த ஆணைக்குழுக்களை முடக்க மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். அதனடிப்படையில், நிதி பற்றாக்குறையினை ஒரு கேடயமாக பயன்படுத்தி நாட்டு மக்களின் வாக்களிக்கும் இறையாண்மை உரிமை மீறப்பட்டுள்ளது, இது நம்பகத்தன்மை அற்ற விளக்கமாகும். தற்பொழுது குடிமக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை அதேபோன்று இந்த அதிகார சபைகள் நாட்டின் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் தேர்தல்களினால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இது விரைவாக கவனிக்கப்படாவிடின் இலங்கை ஜனநாயக நாடு என்ற வரையறை கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க அதன் மூலக் காரணமான மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நிவர்த்தி செய்வது அவசியமாகும். இந்த அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும் பொருளாதார மீட்சிக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு சிக்கலான முதலீட்டுச் சூழலாக இலங்கை தொடர்ந்தும் கருதப்படும்.

ஊழலை தடுக்கவும் நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் அரச நிர்வாக செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வது அவசியமாகும். மக்கள் தமது பிரதிநிதிகளையும் பொதுவளங்களின் பொறுப்புவாய்ந்தவர்களையும் பொறுப்புக்கூற வைக்க, பொதுமக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தக்கூடியதாக காணப்பட வேண்டும். ஓர் உண்மையான ஜனநாயக முறைமையானது பொதுமக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தெடுக்கவும் வாக்களிக்கவும் அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் அனைத்து அரச தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கப்படவும் அதேபோன்று தீர்மானங்களில் பங்கேற்றுக் கொள்ளவும் அவற்றுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் தமது கருத்துக்களை தெரிவிக்கவும், ஒன்று சேரவும் மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கவும் முடியுமாக இருத்தல் வேண்டும். மக்களின் நலனுக்காக செயல்படும் அரசாங்கம், பொருளாதாரத்தினை மேம்படுத்த தனது முயற்சியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கண்காணிப்புக்கு தங்களை வெளிப்படுத்த தயங்காது.

இந்தக் கொள்கைகளுக்கு இணங்க, ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பானது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது:

– சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதை உறுதி செய்தல். உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடாத்துதல்.

– கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடலுக்கான உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுதல்.

– பொதுமக்களின் ஜனநாயகம் மற்றும் சிவில் சமூக செயல்பாடுகளுக்கான சூழலை உருவாக்குதல்.

– பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பங்களிப்பினை உறுதி செய்தல்.

– அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலூடாக பொது கண்காணிப்பினை உறுதி செய்தல்.

– சுயாதீன ஆணைக்குழுக்கள் தமது செயற்பாடுகளை சுயமாக மற்றும் திறம்பட நிறைவேற்ற அதிகாரமளித்தல்.

– ஊழலுக்கு எதிரான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த சிறந்த முயற்சியினை மேற்கொள்ளல்.

– தண்டனை வழங்கப்படாத ஊழல் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர கடந்த கால மற்றும் தற்போதைய ஊழல்சார் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

Share:

Related Articles