NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலான் Vs மார்க் :தொடரும் சொற்போர் !

பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் ‘எக்ஸ்’ என மாற்றினார்.

உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.

இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை சண்டைக்கு இழுத்தார்.

இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், “சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்” என பதிலளித்திருந்தார். இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது: தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார். இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது: நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.

இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

Share:

Related Articles