நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 5,000 வரையிலானவர்கள் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாவதாக கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி பெரேரா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எலி காய்ச்சல் லெப்டோஸ்பிரோஸீஸ் என்றழைக்கப்படும் பற்றீரியாவினால் பரவலடையும் நோயாகும். இந்த நோய் பரவலடைவதற்கு பிரதான காரணம் எலிகளாக இருக்கலாம் என்று கருதப்படுவதாலேயே இதனை எலி காய்ச்சல் என்று அழைக்கிறார்கள். இந்த பற்றீரியா எலி போன்ற உயிரினங்களின் கழிவகற்றும் பகுதிகளில் உயிர்வாழ்கின்றன.
அவ்வாறான உயிரினங்கள் நீர் பருகுவதற்காக நீர் இருக்கும் பிரதேசங்களுக்கு வரும்போது அவற்றின் கழிவுகள் நீரில் கலக்கின்றன. அதனூடாக இந்த நோய் காரணி மனித உடலுக்குள் நுழைந்து நோய் நிலைமையை ஏற்படுத்துகிறது.
எலியை போன்று, மாடுகள் அநேகமான சந்தர்ப்பங்களில் நாய்களினூடாகவும் இந்த பற்றீரியா பரவலடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எமது உடம்புகளில் இருக்கும் காயங்களினூடாகவும் இந்த நோய் பரவலடைகிறது.
எமது நாட்டை பொறுத்தவரையில் வருடம் முழுவதும் இந்த எலி காய்ச்சல் பரவலடைகிறது. ஆனால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காலப்பகுதியும் இருக்கிறது. உதாரணமாக விவசாய போக காலங்கள், அதிக மழை போன்ற காலங்களில் இந்த எலிக்காய்ச்சல் பரவலடைகிறது.
கடந்த சில வருடங்களாக, ஒரு வருடத்துக்கு பொதுவாக 6,000 அல்லது அதற்கு இடைப்பட்ட நோயாளர்களே பதிவாகியிருக்கிறார்கள். கடந்த வருடத்தில் 9,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5,000 வரையான நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள். அதற்கமைய, பொதுவாக ஒவ்வொரு வருடமும் 100 அல்லது அதற்கு அதிகமானவர்கள் இந்த நோயினால் உயிரிழக்கிறார்கள்.
மாவட்ட அடிப்படையில கணித்தால் தற்போதைய நிலைமைகளில் இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவாகிறார்கள். அதாவது, நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்த வகையில் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அதிகளவில் ஆண்களே இந்த நோயினால் பாதிப்படைகிறார்கள். ஆனால், தற்போது பெண்கள் பாதிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என்றார்.