NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகவுள்ளதோடு, இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பாரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது.

இலங்கைக்கான தனது சந்தை பிரவேசத்தை விரிவுபடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவளிப்பதற்கான தமது அரப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தினர்.

அத்துடன், அறிவுப் பரிமாற்றம், கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் புதிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

தொழிற்கல்வி, கடல்சார் விவகாரங்கள், முதலீடு, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை தூதுக்குழு வலியுறுத்தியதுடன், இந்த பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் உறுதி செய்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திய இலங்கைக்கு தூதுக்குழுவினர் பாராட்டு தெரிவித்ததுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நாடுகளின் ஜனாதிபதிகள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

ஜெர்மனித் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன், (Felix Neumann) , இத்தாலிய தூதுவர் டெமியானோ பிராங்கோவிக், (Damiano Francovigh), ருமேனியாவின் தூதுவர் ஸ்டெலுடா அர்ஹைர் Steluta Arhire மற்றும் பிரான்சின் தூதுவர் மாரி-நோயில் டூரிஸ் (Marie-Noelle Duris)  மற்றும் நெதர்லாந்தின் பிரதித் தூதுவர் இவாம்ஸ் ரட்ஜன்ஸ் (Iwams Rutjens) ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles