NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ்லாந்தில் 24 மணிநேரத்தில் 1400 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்தின் தென்மேற்கு தீபகற்பத்தில் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. இந்த நிலநடுக்கம் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

24 மணி நேரத்தில் 1400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தொடர் நிலநடுக்கத்தால் எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்ததால் அந்த சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இந்த கிராமத்தில் சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் இவர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 4 இடங்களில் தற்காலிக முகாம்கள் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ப்ளூ லாகூன் நவம்பர் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “பூமியில் சுமார் 5 கி.மீ. ஆழத்தில் பாறைக்குழம்பு மேற்பரப்பை நோக்கி நகரத் தொடங்கினால் அது எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கும். எனினும் இந்த பாறைக்குழம்பு மேற்பரப்பை அடைந்து எரிமலையாக வெடிக்க சில நாட்கள் ஆகும்” என்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles