கடந்த ஒன்றரை வருடங்களில் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்குத் திரும்பிய 263 விசேட வைத்தியர்களில் 11 மயக்கவியல் நிபுணர்கள் உட்பட 120 வைத்திய நிபுணர்கள் அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அதபத்து தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வைத்தியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களில் 29 மயக்கவியல் நிபுணர்கள் விசேட பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்களில் 11 பேரே இவ்வாறு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான நிபுணத்துவ வைத்தியரின் பயிற்சிக்காக முழுமையான புலமைப்பரிசில் பெறுபவருக்கு சுமார் 15 மில்லியன் ரூபாவும், பகுதியளவு புலமைப்பரிசில் பெறுபவருக்கு சுமார் 8 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டில் சிறப்புப் பயிற்சி பெற்ற பிறகு, அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் இலங்கையில் பணியாற்ற வேண்டும். ஆனால் அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளமை சட்டவிரோதமான செயல் என அவர் மேலும் கூறியுள்ளார்.