கடந்த இரு மாதங்களில் சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
131 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சிறுமிகள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கருத்து வெளியிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த பாரதூரமான பிரச்சினையை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.