(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேர் சத்திரசிகிச்சையின் பின்னர் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இக்குழுவினர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடி விசாரணை அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் மகேந்திர செனவிரத்ன உட்பட்ட குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட 18 பேருக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு அறிவித்திருந்த போதிலும் 16 பேர் மாத்திரமே கலந்து கொண்டனர்.
இதுதொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் இதன்போது அவர்களுடைய குடும்ப விவரம், வருமானம் உட்பட அனைத்து விடயங்களும் கேட்டறியப்பட்டு விரிவான
அறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் வாசித்து தெளிவுபடுத்திய பின்னர் அவர்களிடம் கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசேட வைத்தியர்கள் மூலமாக விரிவான கண் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வைத்திய அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையானது பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் .ஆர்.எம்.எஸ்.கே. ரட்ணாயக்க, தெரிவித்துள்ளார்.