வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவதினமான நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50 கைதிகள் தப்பி ஓடியதையடுத்து, இரவு 7 மணியளவில் 80 பேர் மீண்டும் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு இரவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரு சம்பவங்களிலும் தப்பி ஓடிய 130 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கட்டுபாடுகள் அதிகம் எனவே இங்கு இருக்கமுடியாது. தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே இவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகிய சுமார் 500 மேற்பட்ட கைதிகள் புனர்வாழ்வு பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.