களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று அதிகாலை காலியில் வைத்து 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி, ஆண் மற்றும் பெண் நண்பர்கள் குழுவுடன் விடுதிக்குச் சென்றதாகவும், பின்னர் அவர் சனிக்கிழமை ஹோட்டல் வளாகத்தின் பக்கத்திலுள்ள புகையிரத தண்டவாளத்தில் இறந்து கிடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பாக முதலில் தம்பதியரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்ட நிலையில், பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் மரணத்தைத் தொடர்ந்து பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் விடுதியில் கடைசியாக இருந்ததாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் இன்று அதிகாலை காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த தனது மகள் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு உயிரிழந்த பெண்ணின் தாயார் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது மகள் வீட்டில் இருந்ததாகவும், குறிப்பிட்ட பெண் தோழி ஒருவரால் வெசாக் தானசாலையில் கலந்து கொள்வதாக கூறி வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தோழியின் மீது வெறுப்பை வெளிப்படுத்திய உயிரிழந்த பெண்ணின் தாயார், தனது மகள் தோழியின் வேண்டுகோளுக்குப் பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், வீட்டு உடை அணிந்தே வெளியேறியதாகவும் கூறினார்.
தனது காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக தனது மகளை இழுத்துச் சென்றதாகவும், அதன் மூலம் இனந்தெரியாத ஆணுடன் விட்டுச் சென்றதன் மூலம் தனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், ஊடகங்கள் சரியான தகவல்களை மாத்திரம் வெளியிடுமாறும், தனது மகளின் நற்பெயரை அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள அவர், தனது மகளின்; கொலைக்கு நீதி வழங்குமாறு கோரியுள்ளார்.