NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கள்ள வாக்களிப்பவருக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்க தடை!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறைத் தண்டனையும் 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பல கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது, அந்த வாகனத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கள்ள வாக்களிக்கும் நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனைகளை வழங்க முடியுமென ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.

அதன்படி, கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும். அல்லது 12 மாதங்கள் சிறைத் தண்டனையை விதிக்க முடியும். அல்லது இரண்டு இலட்சம் அபராதத்துடன், தண்டனையையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு 15 இலக்க சட்டத்தின் பிரகாரம் 500 ரூபா தண்டப்பணமே கள்ள வாக்களிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி தேர்தல் சட்டத்திருத்தத்தினூடாக இந்த தொகை 2 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

எனவே, கள்ள வாக்களித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மேற்படி தண்டனைகள் விதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்கவும் வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles