காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு 24 மணி நேரத்தில் இடம் பெயருமாறு, சுமார் 10 இலட்சம் பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விதித்த நிலையில், ‘இது மிகவும் ஆபத்தானது சாத்தியமற்றது’ எனவும், ‘போர்களுக்கும் கூட விதிமுறைகள் உள்ளன’ எனவும், ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடி தாக்குதல்களில் இறங்கியது.
காசாவில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருதரப்பிலும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, காசாவின் வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு 24 மணிநேரத்தில் இடம்பெயருமாறு சுமார் 10 இலட்சம் பேருக்கு இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
காசாவில் உள்ள ஐ.நா. பாடசாலைகள், சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இஸ்ரேல் குறிப்பிட்டது.
வடக்கு பகுதியில் ஹமாஸ் போராளிகளின் உட்கட்டமைப்புகளை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தும் நோக்கில், இஸ்ரேல் இந்த உத்தரவை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
காசாவின் ஒட்டுமொத்த பகுதியும் முற்றுகையில் உள்ள நிலையில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் இல்லாத பகுதிக்கு நகர்த்துவது மிகவும் ஆபத்தானது. சில சந்தர்ப்பங்களில், இது சாத்தியமற்றதாகும்.
தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழிகின்றன. வடக்கில் இருந்து வரும் புதிய நோயாளிகளை அந்த மருத்துவமனைகளால் ஏற்க முடியாது.
காசாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த சில நாள்களில் மருத்துவ கட்டமைப்புகள் மீது 34 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு சுகாதார அமைப்புமுறை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
ஒட்டுமொத்த பகுதியிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
போர்களுக்கும்கூட விதிமுறைகள் உள்ளன. எனவே, காசாவில் மனிதாபிமான அடிப்படையில் உணவு, குடிநீர், எரிபொருள் போன்ற உதவிகள் ஐ.நா. தரப்பில் வழங்கப்பட அனுமதிக்க வேண்டும்.சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதோடு, அவை உறுதி செய்யப்பட வேண்டும்.
பொதுமக்களின் உயிர் காக்கப்படுவது முக்கியம். அவர்களை கேடயமாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கடமை என தெரிவித்துள்ளார்.