கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் சிக்கிய எரிபொருள் பவுசரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பவுசர் மோதியதில் வீதியோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான வளாகமொன்றின் மதிலின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் இலங்கை டெலிகொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்களும் உடைக்கப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.