NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலாவதியான மருந்தால் கண்பார்வை இழப்பு – நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு முழுமையான கண்பார்வை இழப்பு அல்லது பார்வை பலவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்பட்டதன் காரணமாக சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5ஆம் திகதிக்கு பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்கள் கண்பார்வையை இழந்துள்ளனர் அல்லது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்ததாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

சத்திரசிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட மருந்துகளினால் முழுமையாக கண்பார்வை இழந்தவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு படிப்படியாக குணமடைந்து வருவதாக வைத்தியர் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் உரிய அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், காலாவதியான மருந்தை இறக்குமதி செய்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக வைத்தியர் மகேந்திர செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles