காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதற்கு பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்த நிலையில் சுமார் 13 மாதங்களாக நடந்து வரும் மோதலில், காஸா முனையில் இதுவரை 44,056 பேர் உயிரிழந்து உள்ளதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 1,04,268 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவை அளித்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரபு பாராளுமன்றம் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் அரசால் நடாத்தப்படும் இடைவிடாத போரினால் ஏற்பட்ட மோசமான துன்பங்கள் மற்றும் துயர நிலைமைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட்டதாக அரபு பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி, தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி வெளியிட்டுள்ள அறிக்கையில்;, அனைத்து மட்டங்களிலும் அரசியல் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான துன்பங்களை போக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதன்மையாக உள்ளதாகவும் இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தனது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு மரியாதை செலுத்துவது ஒரு தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமையாகும் எனவும் அல்-யமாஹி குறிப்பிட்டுள்ளார்.