NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிநீரை இழக்கத் தயாரில்லை” அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த தோட்ட மக்கள்

பல வருடங்களாக தாம் பயன்படுத்தும் நீரை இல்லாமல் செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுப்பதாக தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட தமிழ் மக்கள் குழுவொன்று குற்றம் சாட்டுகின்றது.  

தலவாக்கலை நகருக்கான குடிநீரை விநியோகத் திட்டத்தை விரிவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டினால், தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என தலவாக்கலை, கல்கந்தை தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்கந்த தோட்ட மக்கள் நீரைப் பெற்றுக்கொள்ளும் கல்லாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணையை மேலும் உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக தோட்ட மக்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என கல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மோகன் தெரிவிக்கின்றார்.    

“ஆரம்பத்தில் பழைய அணைக்கட்டுக்கு அருகில் கல் ஒன்றை உடைப்பதாக தெரிவித்தே பணிகளை ஆரம்பித்தார்கள். எனினும் பின்னர் ஒரு அடி உயரத்தில் இருக்கும் பழைய அணையை சுமார் ஐந்து  அடிக்கு உயர்த்தி தோட்டத்திற்கு வரும் நீரை முழுமையாக இல்லாமல் செய்யும் வகையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த தோட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படப்போகிறார்கள்.”

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன்-கல்கந்த தோட்டத்தில் சுமார் 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதோடு, இவர்களில் சுமார் 30 குடும்பங்கள் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர். ஒரு சில குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை மலை அடிவாரத்தில் ஆரம்பமாகும் (கல்லாறு) ஆற்று நீரையே இந்த தோட்ட மக்கள் குடிப்பதற்கும் விவசாய நடவடிக்கை உள்ளிட்ட ஏனைய  தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

தோட்ட நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்த்தாங்கிகள் ஊடாக நீர் விநியோகம் இடம்பெறுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த கல்லாறில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணையை உயர்த்தி, தலவாக்கலை நகருக்கான குடிநீர்த் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகளுக்கு தோட்ட மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுத் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் மற்றும் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மோகன்  தெரிவிக்கின்றார்.

“இந்த பிரச்சினை குறித்து சிடபிள்யுசி தலைவர்களுக்கு எமது தோட்டத் தலைவர்கள் அறிவித்தனர். தோட்ட அதிகாரிக்கும் இதுத் தொடர்பில் தோட்ட மக்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.”

தமக்கான குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கல்கந்த தோட்ட்ட மக்கள் பெப்ரவரி 27ஆம் திகதி  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

“போராடுவோம் போராடுவோம் தண்ணீர் கிடைக்கும் வரை போராடுவோம்,” “வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்.” “மறிக்காதே மறிக்காதே தண்ணீரை மறிக்காதே” போன்ற கோசங்களை எழுப்பியவாறு தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2002ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால்  தலவாக்கலை நகர நீர் விநியோக வேலைத்திட்டம் என்ற பெயரில் கல்லாறு ஆற்றின் ஒரு பகுதியை  மறித்து அணையிட்டு அங்கிருந்து குழாய்கள் ஊடாக தலவாக்கலை நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

எனினும் இந்தத் திட்டத்தினால் கல்கந்தவத்தை தோட்ட மக்களுக்கான நீர் விநியோகத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என  தெரிவிக்கும் தோட்ட மக்கள், கடந்த இரு தசாப்தங்களாக தடையின்றி தமக்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனினும், தற்போது தலவாக்கலை நகரின் நீர்த்தேவை அதிகரித்துள்ள நிலையில், மேலதிகமாக தண்ணீரை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக ஆற்றின் அணையை மேலும் உயர்த்தி குழாய்களை பொருத்தும் திட்டம் ஒன்றுஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும், முதலில் கல்கந்தவத்தை தோட்டத்தில் வசிக்கும்  குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்தத் திடடத்தினால் தமக்கு குடிநீரைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என தோட்ட மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குடிநீராகவும், விவசாயம் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் கல்லாறு ஆற்றின் நீரையே இத்தனை காலமும் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதோடு, நீரைப் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் ஏதும் அந்த மக்களுக்கு இல்லை என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles