முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கில் முன்னிலையாகிவரும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு அதிகாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 10 ஆம் திகதி சட்டத்தரணிகள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்இ குறித்த சட்டத்தரணிகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் புலனாய்வுத் துறையினர் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக தகவல்களை சேகரிப்பவர்கள் எனவும்இ எனினும் வெளிப்படையாக தகவல் சேகரிப்பது சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் முயற்சி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லை எனில்இ நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் புலனாய்வு அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை சட்டத்தரணிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கபட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த விசாரணையின் போது அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கு அமைய மாவட்ட செயலகம், பிரதான செயலகம் மற்றும் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 05 ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் குழாய் இணைப்பை பாதிப்பதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போதே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது 13 பேருடையது என நம்பப்படும் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.