களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி கங்கையின் நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் களனி கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் சாத்தியகூறுகள் காணப்படுவதால் இந்த வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், தற்போதைய நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 90 ஆக உள்ளதால், இன்று பிற்பகல் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.