NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் திலீபனின் நினைவேந்தலை நடத்த தடை!

இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையில் தலையிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, நினைவேந்தலைத் தடுக்குமாறு நீதிமன்றத்தை பொலிஸார் வழிநடத்தியுள்ளனர்.  

இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த தியாகி திலீபன் என போற்றப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரை செப்டெம்பர் 19ஆம் திகதி மாலை கொழும்பில் நினைவுகூரத் தயாரென,  சிவில் சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்திருந்தனர்.

இதற்கு எதிராக வட்ஸ்அப் தகவல் மூலம் இனக்கலவரத்தை தூண்ட டேன் பிரியசாத் என்ற நபர் திட்டமிட்ட நிலையில், தேசிய பாதுகாப்பை முன்வைத்து நினைவேந்தலை தடுக்க நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்ள மருதானை பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த ஒன்றுகூடல் “தேசிய பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதற்கு எதிரான தரப்புடன் மோதலுக்கு வழிவகுக்கும்” எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

எதிர்த்தரப்பின் தாக்குதல் திட்டங்களை முறியடிக்க பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நீதிமன்ற உத்தரவில் தெரியவில்லை.

செப்டெம்பர் 19 நண்பகல், பொலிஸ் அதிகாரிகளுடன் மருதானை சமூக மற்றும் சமாதான அமைதி நிலையத்திற்கு வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நீதிமன்ற உத்தரவை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலுக்கு வழங்கி, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் தொடர்பில் பேசுவதற்கு உரிமை இல்லை என்று வலியுறுத்தினர்.

“இதைச் செய்யாதே. பிரஸ் மீட்டை இங்கு இங்கு நடத்த வேண்டாம். இதைச் செய்ய விடமாட்டோம். காரணம், இங்கு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவரைப் பற்றி பேச இங்கு உரிமை இல்லை. பிறகு நாங்கள் அதை இனப்பிரச்சினையாக மாற்ற அனுமதிக்க முடியாது பாதர். அப்படி நடந்தால், பாதரை கைது செய்ய வேண்டியேற்படும்.”

மருதானை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.டி.குஷாந்த செய்தி முறைப்பாட்டிற்கு அமைய, மாளிகாகந்த மேலதிக நீதவான் பி.ஏ.தம்மிக்க ஹேமபால பிறப்பித்த உத்தரவில் நினைவுதினத்தை எதிர்ப்பவர்களால் முரண்படுகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால், திலீபன் நினைவேந்தலை நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருதானை – கொழும்பு 10 இல் அமைந்துள்ள சி.எஸ்.ஆர் என்ற இடத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் லெப்டினன்ட் கேணல் தியாகி திலீபன் என்ற இராசையா பிரதிபனின் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவுள்ளதுடன், அது தேசிய பாதுகாப்பிற்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க் கருத்துடையவர்களுடன் மோதல்கள் ஏற்படலாம். திலீபனின் நினைவேந்தல் விழாவைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.”

நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களை ‘புலிகள்’ என அறிமுகப்படுத்தி ‘முதுகெலும்புள்ள’ சிங்களவர்களை கொதிப்படையச் செய்ய அதிருப்தியாளர் ஒருவர் முயற்சித்திருந்தார்.

“முதுகெலும்பு உள்ளவர்கள் தயாராக இருங்கள். நாளை கொண்டாட நாங்களும் வருவோம். கொழும்பு வரும் புலிகளுக்கு தாக்குதல் பூஜை. மாலை 3 மணிக்கு மருதானையில் சி.எஸ்.ஆர்” என “768882223 டான் பிரியசாத்” என்ற பெயரில் வட்ஸ்அப் செய்தி பரிமாறப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு வெறுப்பூட்டும் வகையில் மக்களை ஒன்றுகூட்டுவதற்கு முயற்சித்த நபர் மீது பொலிஸார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

செப்டெம்பர் 17ஆம் திகதி திலீபனின் உருவம் தாங்கிய வாகனம் திருகோணமலை சர்தாபுர சந்தியை அண்மித்த போது பெண்கள் உட்பட சிங்கள கும்பல் ஒன்று தடிகளுடன் வாகனத்தை சிங்கக்கொடிகளால் தாக்கி, பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையும் தாக்கினர்.

பொலிஸாரினால் கோரப்படும் பாரதூரமான நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நிகழ்வை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் மிகவும் பாரதூரமான சூழ்நிலை ஏற்படும் என நீதவான் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.

“இதற்கமைய 17.09.2023 அன்று திருகோணமலையில் இதேபோன்ற நினைவேந்தலை நடத்தச் சென்றபோது ஏற்பட்ட சூழ்நிலையை நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். மேலும் தீவிரமான சூழ்நிலை மற்றும் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களின் திட்டங்கள் குறித்து இன்று உறுதியான கருத்துக்கு வர முடியும். என கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், மிக மோசமான சூழ்நிலை உருவாகலாம்.”

மருதானை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.டி.குஷாந்தவின் கூற்றுக்கு அமைய, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படக்கூடிய மோதலைத் தடுக்க பொலிஸாரை அனுப்புவது ஒரு பாரபட்சமான சூழ்நிலையாகும்.

“சம்பந்தப்பட்ட நடவடிக்கைப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரை நியமித்ததன் மூலம் ஏற்பட்ட பாரபட்சமான நிலைமையையும் நிலை பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய இந்த நடவடிக்கையானது அமைதியான சூழ்நிலையில் இருந்து விலகி, பொதுமக்களை ஒடுக்கும் சூழ்நிலையையும், தேசிய பாதுகாப்பை பாதிக்கும் சூழ்நிலைக்கும் வழிவகுக்கும் என்பதை நிராகரிக்க முடியாது.
எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறேன்” என  மாளிகாகந்த மேலதிக நீதவான் பீ.ஏ.தம்மிக்க ஹேமபால விடுத்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மருதானை பொலிஸ் எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் இராசையா பிரதீபன் அல்லது தியாகி திலீபனை நினைவுகூரும் வகையில் நேரில் ஒன்றுகூடி விழாக்கள் நடத்துவதும் வீதிகளில் ஊர்வலமாகச் செல்வதும் 19.09.2023 அன்று 12.00 மணி முதல் 20.09.2023 அன்று 12 மணி வரை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106வது பிரிவின்படி தடைசெய்யப்படுகிறது”

எவ்வாறாயினும், திலீபன் எனப்படும் விடுதலைப் புலிகளின் இராசையா பார்த்திபனின் 36ஆவது வருடாந்த நினைவேந்தலுக்கான வாகன பேரணியை நிறுத்துமாறு வவுனியா பொலிசார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது.

இந்த வாகன அணிவகுப்பு காரணமாக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என வவுனியாவைச் சேர்ந்த இருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதி ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நீதிமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

நினைவேந்தல்களை செய்ய எவருக்கும் உரிமை உண்டு என வவுனியா நீதவான் சுபஜினி தேவராசா வவுனியா பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பிரதேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டதாக அப்பகுதி ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles