(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு தேசிய வைத்தியசாலை மூலம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமை காரணமாக மின்வெட்டுக்கன சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாத நிலுவைத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சு மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையானது வழங்கப்படாவிடின் வைத்தியசாலை நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகளில் தற்போது அதிகளவான நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாகவும் எந்த ஒரு காரணத்துக்காகவும் மின்வெட்டு ஏற்படின் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மாறாக இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை திருத்தியமைத்துள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஏதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.