NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு வரை கடந்த இரட்டையர் சோழன் உலக சாதனையில் இடம்பிடித்தனர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோமீற்றர் தூரத்தை 3 நாட்களில் நடந்து கடக்கும் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர், தங்களது சாதனை நடைப்பயணத்தை நேற்று (14) அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்திருந்தனர்.

இரண்டாம் நாளான இன்றைய தினம் (15) பொகவந்தலாவை, கொட்டியாக்கலை பகுதியை சேர்ந்த இரட்டையரான ஆர்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் ஆர்.ஏ தயாபரன் தற்போது கொழும்பு – காலி முகத்திடலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இதுவரை 350 கிலோ மீற்றரை 32 மணிநேரங்களில் கடந்து வந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இருவரும் நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் தங்களது நடைபயணத்தை ஆரம்பிக்கவிருந்த வேளையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரால் நடைப்பயணத்துக்கு இடையூறு விளைக்கப்பட்ருந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.

இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலர் இரட்டையருக்கு ஆதரவும்,இடையூறு விளைவித்த பொலிஸாருக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர்.

இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையான 566 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து சென்று, உலக சாதனை படைப்பதற்காக நேற்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பயணத்தை ஆரம்பிக்க தயாராயிருந்தனர்.

இந்நிலையில், நடைபயணம் மேற்கொள்ளவிருந்த இரட்டையரோடு, அவர்களை ஊக்கப்படுத்தச் சென்ற பொகவந்தலாவை, நுவரெலியாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும், அங்கு பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் குறித்த இளைஞர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அங்கிருந்து துரத்த எத்தனித்துள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இளைஞர்களிடம் பொலிஸார் ஜாதி, இனம் குறித்தும் வீண் வாக்குவாதம் செய்ததாகவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் இருவருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, நீண்ட நேரத்துக்குப் பின்னர், பெரும் போராட்டத்தை கடந்து, சரியாக அதிகாலை 4 மணிக்கு இரட்டையரின் நடைப்பயணம் ஆரம்பமானது.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்துக்கு சென்று, அங்கிருந்து கொழும்பை அடைந்துள்ள இவர்கள், காலி நோக்கிய தங்களது நடைபயணத்தை தொடர்ந்து, நாளை 16ஆம் திகதி காலியில் தங்களது பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

கடந்த காலத்தில் இவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீட்டர் தூரத்தினை வெறுமனே 6 மணித்தியாலங்களில் நடந்து பயணித்தும், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சென்றடைந்தும் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விவரங்களுக்கு:

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles