101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளான நேற்று (28) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் அருந்தவராசா புவிதரன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையின் நடப்புச் சம்பியன் சச்சின் எரங்க ஜனித், முன்னாள் சம்பியன் இஷார சந்தருவன் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் இந்தியாவின் நடப்புச் சம்பியன் சிவ சுபர்மணி ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.
எனினும், இலங்கை வீரர் இஷார சந்தருவன் மற்றும் இந்திய வீரர் சிவ சுபர்மணி மற்றும் யாழ். வீரர் புவிதரன் ஆகிய மூவரும் முறையே 4.90 மீட்டர் உயரத்தைத் தாவி முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன், தற்போது இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணிக்காக விளையாடி வருவதுடன், இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 5.00 மீட்டர் உயரம் தாவி இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.