2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனவே பரீட்சாத்திகள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே பரீட்சை அனுமதிப் பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ, துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் குழுவொன்று இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் நேரடியாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக செயற்படவுள்ளதாகவும், தேவையான அறிவுறுத்தல்கள் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.