NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மீன்பிடிக்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கிழக்கில் குற்றச்சாட்டு!

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 சிங்கள, தமிழ் மீனவர்கள், 176 மீனவர்களுக்கு, இரவு நேரத்தில், சுருக்கு வலை மீன்பிடிக்கு, மீன்பிடி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதால், ஏனைய சாதாரண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் மாத்திரம் வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி அவர்கள் பகலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் சிறிய மீன் இனங்கள் உள்ளிட்ட கடல் வளம் பாரியளவில் அழிவடைந்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கடற்படை உட்பட உரிய அதிகாரிகளிடம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க தலையிடுமாறு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை திரியாய் முதல் வெறுகல் வரையிலான மீனவக் கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆயிரம் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் மீன்பிடியின் ஊடாக கிடைக்கும் வருமானத்திலேயே வாழ்வதாகவும், ஆனால் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மீனவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கமளித்த தமிழ் மீனவர் ஒருவர், மீனவர்கள் கடன் சுமையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

“திரியாய் முதல் வெறுகல் வரையிலான மீனவர்கள் கடன் பெற்று உண்ணும் சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு காரணம் சுருக்கு வலையால் கடல் வளம் அழிவடைகின்றமையே. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இப்பிரச்சினை நீடிக்கிறது.”

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles