NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்திரயான் – 4 திட்டத்துக்கு தயாராகும் இந்தியா!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான் – 4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. சந்திரயான் – 4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவிக்கையில், ‘சந்திரயான் -4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் 6 மாதங்களாகும். இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும்.

இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மாத்திரம் 350 கிலோவாகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணல் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும்.

அதேபோல், சந்திரயான் – 3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் – 4இல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான் – 4 திட்டத்தின் நோக்கமாகும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles