NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாந்தனின் பூதவுடல் யாழிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் ஆரம்பம்…!

சாந்தன் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து, அவரது பூதவுடல் உறவினர்களிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில்,கடந்த 28 ஆம் திகதி காலமானார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த சுதேந்திர ராஜா 1991 ஆண்டு ஜீலை மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதன் பின்னர், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தனும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

தனது இறுதி காலத்தை தனது தாயாருடன் செலவழிக்க வேண்டும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என சாந்தன் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்தநிலையில், சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார்.

Share:

Related Articles