NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் தமிழ் பாடசாலைகள்; இந்த முயற்சிக்கு இடந்தர மாட்டேன் – மனோ MP

கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள்.

உண்மையான நல்லிணக்கம் உருவாக, வளர்ச்சியடைந்த கொழும்பு பாடசாலைகளான ரோயல் கல்லூரி, இசிபதன கல்லூரி, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி ஆகியவற்றில் திட்டமிட்டு குறைக்கப்படும் தமிழ் வகுப்புகளை கூட்டுங்கள்.

வளர்ச்சியடைந்த ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, விசாகா கல்லூரி ஆகியவற்றில் தமிழ் மொழி பிரிவுகளை ஆரம்பியுங்கள்.  இதன் மூலம் தமிழ் மொழி மூல பிள்ளைகளுக்கு வளர்ச்சியடைந்த நல்ல கல்வி வாய்ப்புகளை வழங்குங்கள்.

இதை செய்யாமல், எம்மிடம் எஞ்சி இருக்கும் கல்வி வாய்ப்புகளையும் பிடுங்க முயலும் இத்தகைய போலி நல்லிணக்கத்துக்கு கொழும்பு மாவட்ட எம்பியான இந்த மனோ கணேசன் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். 

கொழும்பு கல்வி வலயத்தில் வடகொழும்பு கோட்டத்தில், கலைமகள் தமிழ் வித்தியாலயத்துடன் அருகாமை சிங்கள மொழி பாடசாலையை இணைக்கும் இரகசிய முயற்சி தொடர்பில் மனோ எம்பி, கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் தேவபந்துவுக்கு தொலைபேசியில் அறிவித்து விட்டு, எழுத்து மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,  

தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் இந்த முயற்சியை ஒருசில மதத்தலைவர்கள் செய்ய முயல்கிறார்கள். ஒரு கீழ்மட்ட அரசியல்வாதியும் இதில் தொடர்புற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட எம்பியான எனக்கு தெரியாமல் செய்யப்படும் இந்த இரகசிய முயற்சி பற்றி கலைமகள் தமிழ் பாடசாலை பெற்றோர்கள் எனக்கு புகார் செய்துள்ளார்கள்.  ஆகவே என்னிடம் விளையாட வேண்டாம். நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.

மாவட்டங்களின் கல்வி நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எனது நண்பர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் முயற்சிகளுக்கு நான் ஒத்துழைப்பு வழங்குகிறேன். அவை பற்றி பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சு ஆலோசனை குழு, கல்வி மேற்பார்வை குழு, கொழும்பு மாவட்ட மற்றும் பிரிவு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் நாம் பார்த்துக்கொள்கிறோம். 

அதிகாரமும், மக்கள் ஆணையும் இல்லாத நபர்களின் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு இடம் கொடாதீர். உண்மையான நல்லிணக்கம் உருவாக, வளர்ச்சியடைந்த கொழும்பு பாடசாலைகளான ரோயல் கல்லூரி, இசிபதன கல்லூரி, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி ஆகியவற்றில் திட்டமிட்டு குறைக்கப்படும் தமிழ் வகுப்புகளை கூட்டுங்கள்.

வளர்ச்சியடைந்த ஆனந்தா கல்லூரி, நாலந்தா கல்லூரி, விசாகா கல்லூரி ஆகியவற்றில் தமிழ் மொழி பிரிவுகளை ஆரம்பியுங்கள்.

இதன் மூலம் தமிழ் மொழி மூல பிள்ளைகளுக்கு வளர்சியடைந்த நல்ல கல்வி வாய்ப்புகளை வழங்குங்கள்.

இதை செய்யாமல், எம்மிடம் எஞ்சி இருக்கும் கல்வி வாய்ப்புகளையும் பிடுங்க முயலும் இத்தகைய போலி நல்லிணக்கத்துக்கு கொழும்பு மாவட்ட எம்பியான இந்த மனோ கணேசன் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்  என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles