உயிர் பாதுகாப்பிற்காக சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீளாய்வின் பின்னர் மீளவும் வழங்குவது தொடர்பிலான பரிசீலனைக்குட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
துப்பாக்கிகள், அவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள தோட்டாக்களை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசறை வணிக வெடிபொருட்கள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஒப்படைத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டின் பிரதியை பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவின் ஆவணங்களை பொறுப்பேற்கும் கருமபீடத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திற்கு முன்னதாக துப்பாக்கிகளை மீளக் கையளிக்கத் தவறினால் துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நேரிடும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சொத்துக்களின் பாதுகாப்பு, விவசாய செய்கைகளின் பாதுகாப்பு, விளையாட்டுத் துறைக்காக பாதுகாப்பு அமைச்சு விநியோகித்துள்ள துப்பாக்கிகள் தொடர்பில் குறித்த அறிவித்தல் பொருந்தாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.