சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் திகதியை தீர்மானிப்பதற்கான பாராளுமன்ற விவகாரங்கள் சார் குழு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளுமாறு சபாநாயகரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடுகள் மற்றும் இலவச சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையும் 45 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளித்துள்ளன.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயர்தன ஆகியோரால் கடந்த மாதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
ஆனால், தமது மனைவியும் பிள்ளைகளுமே சுகாதார அமைச்சர் பதவியை இராஜனாமா செய்யுமாறு கோரியுள்ளதாகவும், வேறு எவரும் கோரவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.