விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்த ரஷ்ய செயற்கைக்கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறியதால் சா்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டனா்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அதிகாரிகள் கூறியதாவது:
ரஷ்யாவால் கடந்த 2022-ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று திடீரென உடைந்து நொறுங்கியது. அதன் நூற்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ரேடாரின் கண்களுக்குத் தெரிந்தன. அந்த செயற்கைக்கோள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் அந்த நிலையத்தைத் தாக்கக் கூடும் என அஞ்சி, அதிலிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனா். பின்னா் ஆபத்து நீங்கியதும் அவா்கள் தங்கள் பணிகளைத் தொடா்ந்தனா்.
அந்த ரஷ்ய செயற்கைக்கோள் திடீரென உடைந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
இது குறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.