NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுங்க ஊழியர்களுக்கு 24 மணிநேர மேலதிக கொடுப்பனவு?

கடந்த வருடம் 2,277 சுங்க அதிகாரிகளுக்கு 320 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளமை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து 214 கோடி ரூபாவுக்கு அதிகளவான நிதி , சுங்க மேலதிக நேர சரக்கு ஆய்வு கட்டணம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொடர்பு நிதியில் இருந்து நூற்று ஆறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த செலவீனத்தினை உறுதிப்படுத்தும் வகையில் கைரேகை அறிக்கைகளை சமர்ப்பிக்கப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வருகை மற்றும் புறப்பாடு ஆவணங்கள், மேலதிக வேலை நேர ஆவணங்கள் மற்றும் விடுப்பு ஆவணங்களை ஆய்வு செய்ததில் சுங்கத்தின் நான்கு பிரிவுகளின் ஊழியர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து தினங்களிலும் பணிக்கு சமூகமளித்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த பணியாளர்கள் நாளொன்றுக்கு 24 மணித்தியாலம் வரை மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுள்ளதுடன், இந்த கொடுப்பனவுகள் உரிய பதிவு இன்றி வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இலங்கை சுங்கத்தால் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 2,323 கோடி ரூபாவுக்கும் அதிகமாக காணப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்ட தொகையில் 1,606 கோடி ரூபாவுக்கும் அதிகளவான நிதி 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் பற்றாக்குறை வருமானம் எனவும், 2022 ஆம் ஆண்டு இறுதி வரை குறித்த தொகை வசூலிக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனமொன்றினால் அனுப்பப்பட்ட சிகரெட் தொகை தொடர்பில் இலங்கை சுங்கம் விசாரணை நடத்தி மீண்டும் ஏற்றுமதி செய்ய உத்தரவிட்ட போது, ​​அதன் அதிகாரிகள் குழுவொன்று சர்ச்சைக்குரிய வகையில் சிகரெட்டுகளை ஏலத்தில் விற்பனை செய்து 59 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை வருமானமாக ஈட்டிய நிலையில், இந்த தவறான முடிவால் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு 7 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பான கோப்பு காணாமல் போயுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், சேகரித்து மீள் ஏற்றுமதி செய்வதற்கும் சுங்கத் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள நிறுவனம், பல வருடங்களாக தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்யாது உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கம் வரி வருமானத்தை இழந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறித்த நிறுவனம் சட்டவிரோதமாக உள்நாட்டு சந்தைக்கு விற்பனை செய்த தேங்காய் எண்ணெயின் அளவு 463,065 கிலோ எனவும், இதன் காரணமாக ஐம்பது கோடி ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles