NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் 200 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் 4.55 கோடி ரூபா மதிப்பிலான 8.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஆர். ஸ்ரீனிவாச நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குவைத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக நேற்று முன்தினம் (11) உளவுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஏர் அரேபியா விமானத்தில் வந்த இந்திய பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது, அவரது உடைமைகளுள் ரீசார்ஜ் செய்யக்கூடிய 3 எல்.இ.டி விளக்குகளில் 9 தங்கக் கட்டிகள், 3 தங்கத் தகடுகள் மற்றும் 3 தங்க வெட்டுத் துண்டுகள் என 4.93 கிலோ எடை கொண்ட 2.67 கோடி ரூபா மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.  

இதேபோன்று நவம்பர் 9-ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து ஏ.கே 13 விமானத்தில் சென்னை வந்த மலேசிய பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது உடைமைகளுள் இருந்த துளையிடும் டிரில்லிங் இயந்திரம் ஒன்றினுள் 3.49 கிலோ எடை கொண்ட ரூ.1.88 கோடி மதிப்பிலான 3 தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து இருவரிடமிருந்து சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் ரூ. 4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆண்டு சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் இதுவரை மொத்தம் ரூ.112 கோடி மதிப்பிலான 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles