கொழும்பில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று வழங்கப்படவுள்ளதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரை ஏமாற்றி 15 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவரையே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியது போன்ற போலியான ஆவணங்களையும் இந்த நபர் இந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வகையில் கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பல பண மோசடி வழக்குகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பதிவாகியுள்ளன.
3 வீடுகள் தருவதாக கூறி 39 லட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். அந்த மூன்று வீடுகளுக்கும் 15 லட்சம், 12 லட்சம், 12 லட்சம் எடுத்து மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பில் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முன்வரும் நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.