NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சொர்க்கத்தின் சுமை – “மலையகக் கதைகளின் காட்சி” வடக்கில் ஒரு கண்காட்சி



இரண்டு நூற்றாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களின் கடந்த கால வரலாற்றையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கண்காட்சி ஒன்று இடம்பெறுகிறது.

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் கண்காட்சி மண்டபத்தில் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை கண்காட்சி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சொர்க்கத்தின் சுமை – மலையகக் கதைகளின் காட்சி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில், இந்நாட்டில் 200 வருட வரலாற்றைக் கொண்ட இந்த மக்களின் சமையல் பாத்திரங்கள், கைக்கடிகாரங்கள், பழைய கடிதங்கள், பழைய புகைப்படங்கள், தேநீர் குவளைகள் மற்றும் இந்த மக்களின் சமய வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இலங்கைத் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மலையகத் தமிழ்  மக்களின் வாழ்க்கை முறையைக் கற்றுத் தருவதுடன், அந்த மக்களின் கலை, பண்பாடு, சம்பிரதாயங்களை இன்றைய தலைமுறையினருக்குக் கற்பிப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக தம்மை ஏற்குமாறு 11 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து ஜுலை 28ஆம் திகதி ஆரம்ப நிகழ்வினை நடத்திய மலையகத் தமிழ் மக்கள், ஜுலை 29 முதல் சுமார்  300 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து மாத்தளையை அடைந்து ஓகஸ்ட் 12ஆம் திகதி இறுதி விழாவை நடத்தினர்.

இலங்கையில் மிகப் பெரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்கள் மன்னார் மற்றும் மாத்தளை ஆகும்.

மலையகத் தமிழர்களின் வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல். ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகாரம். தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச் சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை செயற்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை. வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, சட்டப்பாதுகாப்பு, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம். தொழிலாளர்களிலிருந்து சிறு நில உடமையாளர்களாக மாறும் பொருட்டு வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை. மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிக்கு சம பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து. அரசாங்க சேவைககளையும், சமூக நலத்திட்டங்களையும் சமமான அணுகல். பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல். வீட்டுப் பணியாளர்களின் ழுதுமையான பாதுகாப்பு. மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல். அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு, ஆகியவை இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக மாறுவதற்கான மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளாகும்.



Share:

Related Articles