NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுப்பு

காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, C.W.W கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப் பகிர்ந்தளித்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அறிவோடு உரிமையையும் பகிர்ந்தளிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உறுமய திட்டத்தின் கீழ் காணிகளை வழங்க வேண்டியவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாடு என்ற வகையில் அனைவருக்கும் நெருக்கடியான காலம் உருவாகியதால், அனைவருக்கும் நட்டம் ஏற்பட்டதாகவும் இப்போது நாடு நல்ல நிலையை அடையும் வேளையில் அதன் பலன்களும் மக்களை சென்றடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாட்டுக்கு சோறு தரும் விவசாய மக்களுக்கு அவை நிச்சயமாகக் கிடைக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போலவே கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு. விவசாயிகளுக்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இத்தோடு நின்றுவிடாது எனவும் காணிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்பதால் கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விவசாய சேவை நிலையங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் காணி உரிமையின்றி 3 பரம்பரைகளாக சேவையாற்றிய விவசாய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

-தர்மராஜ் யோகராஜ்

Share:

Related Articles