NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனம் இரத்து – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பெண் பட்டதாரி

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

அந்த வைபவத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நியமனத்தில் தவறு இருப்பதாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பரிந்துரை செய்த நிலையில் சில நாட்களில் மீளப் பெறப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பட்டதாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் நான் ஆசிரியர் நியமனத்தை கேட்டு பெறவில்லை எனவும் தனக்கு வழங்கிய நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் உளரீதியான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன் சமூகத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எனது நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் நான் அரச சேவையை முறை தவறிப் பெற்றதாக சமூகத்தில் கருத்துக்கள் உருவாகின்ற நிலையில் தனக்குரிய பரிகார நீதியை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles