NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாத தாக்குதல்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், கோயிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பஸ் மீதே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதக் குழு என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். டிரோன்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.

அவர்கள் உள்ளுர் வாசிகள் கிடையாது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷிவ்கோடா கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டிரோன்கள் மூலம் அப்பகுதிகளில் இராணுவம் தீவிர சோதனையில் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரியாசி மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத தாக்குதல் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles