(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜெர்மனியின் Dusseldorf நகரில் இருந்து இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள சுமார் 13,000 குடியிருப்பாளர்களை தற்காலிகமாக தமது வீடுகளைவிட்டு வெளியிடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த குண்டு வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமையால், அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மற்றும் வெடிகுண்டு ஆபத்துக் களையும் பிரிவு இணைந்து முன்னெடுத்து வருவதாக ஜேர்மன் செய்தி நிறுவனமான Deutsche Welle தெரிவித்துள்ளது.
Dusseldorf நகரிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களினாலே குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறித்த வெடிகுண்டு ஒரு டொன் எடை கொண்டதாக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் Dusseldorf நகரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் சுற்றளவில் உள்ள அனைத்து குடியிருப்புகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், குறித்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்கும் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகையிரத சேவைகள் மற்றும் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பொது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடிகுண்டுகள் இன்னும் ஜெர்மனியில் புதைக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதன்படி, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும் ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு Frankfurt நகரில் 1.4 டொன் எடையுடைய வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்தப் பகுதியில் இருந்து 65,000 பேராய் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெர்மனியின் Frankfurt நகரில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போதும் இதேபோன்று 13,00 பேர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனியின் Munich நகரில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த பகுதியில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வெடிகுண்டை அகற்றும் நடவடிக்கையின் போது அந்த குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.