NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ட்ரம்ப் குற்றவாளி – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றில் அவர் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் குற்றவியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

குறித்த தீர்ப்பானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியான வர்த்தக அறிக்கைத் தாயாரித்தார் என ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 34 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதா அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

நிவ்யோர்க் மாநிலத்தின் மேன் ஹட்டன் குற்றவியல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஆறு வார காலமாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஜூரி சபை உறுப்பினர்கள் தீர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ராம்ப், அந்நாட்டு திரைப்பட நடிகையான ஸ்டோம் டேனியல்சுடன் பேணிய தொடர்பினை மூடி மறைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அவருக்கு 130000 டொலர்கள் பணத்தை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொடுப்பனவு தொடர்பில் போலியான வியாபார அறிக்கையொன்றை தயாரித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலே வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

நடிகைக்கு ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கேல் கோகன் பணத்தை வழங்கியிருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் காலப்பகுதிளில், குறித்த திரைப்பட நடிகை தகவல்களை ஊடக நிறுவனத்திற்கு விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ராம்பிற்கு எதிரான தண்டனை எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்செயலுக்காக சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில சந்தர்ப்பங்களில் ட்ராம்பிற்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முனைப்புக்களில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமக்கு எதிரான தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை ஊழல் மிக்க மோசடியான ஒன்று எனவும் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரகசிய ஆவணங்களை தம்வசம் வைத்திருந்தமை, தேர்தல் முடிவுகளுக்கு தாக்கம் செலுத்தியமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ட்ரம்பிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.       

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles