NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் 6000 யானைகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் ரஜரட்ட, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் உள்ள வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் ஏனைய காடுகளில் 6000 யானைகள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 450 காட்டு யானைகள் உயிரிழக்கும் நிலையில், இது கடும் வறட்சியினால் ஏற்பட்டுள்ள மற்றொரு பரிதாபகரமான நிலை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உடவலவ பூங்காவில் அமைந்துள்ள காடுகள் மற்றும் மகாவலி ஆற்றின் அனைத்துப் பகுதிகளிலும் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அது யானைகளுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.’ என தெரிவித்தார்.

இதேவேளை, ஒவ்வொரு வருடமும் இந்த வறட்சி காலம் வருவதால், வனவிலங்கு திணைக்களம் வாழ்விடங்களை முகாமைத்துவம் செய்வதற்கும், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கும், கிராமங்கள் மற்றும் வனப் பூங்காக்களை சுற்றி மின்சார வேலிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

சில யானைகள் இடம்பெயர்ந்த பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இருந்து யானைகள் கிராமங்களைத் தாக்கி விவசாயிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யானைகள் நடமாட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால், காட்டு யானைகளினால் ஏற்படும் உயிரிழப்புகளையும், யானைகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் சேதங்களையும் 90 வீதம் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles