NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் MP மீதான தாக்குதல் – தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் வலுக்கும் கண்டனம்!

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் நினைவு வாகனப் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தென்னிலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  


இந்த சம்பவத்தை தான் மிக வன்மையாக கண்டிப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

“தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உட்பட ஊர்தியோடு பயணித்தவர்கள் தேசிய கொடி தாங்கியவர்களால் மிருகத்தனமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.”

தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத வன்முறை அரசியலை இனவாதிகள் தொடர்ந்தும் செய்ய  விரும்புகின்றார்கள் என்பதையே இந்த தாக்குதல் வெளிப்படுத்துவதோடு இந்நாட்டில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும், மனித  பேரவையும் உணர்ந்திருக்கும் என தான் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதான தாக்குதல் தொடர்பில்  உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“எம்.பி கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், எம்.பி உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலசிடம் இன்று கூறினேன்.  அப்படியே தான் செய்வதாக அமைச்சர் என்னிடம் உறுதியளித்தார்.  இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் நான் தொடர்புற்று அறிவித்தேன்.” என மனோ கணேசன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியாகவும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுப்பெற்றுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும், இலங்கை மக்களின் நினைவேந்தல் உரிமையை பாதுகாக்குமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் (Siobhain McDonagh) தெரிவித்துள்ளார்.

“தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதான தாக்குதலை நான் கண்டிக்க விரும்புகின்றேன். இத்தாக்குதல்கள் நடக்கும்போது இலங்கை பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.  சர்வதேச சமூகம் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்த வேண்டும் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளை பாதுகாக்க வேண்டும்.” என அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தான் கண்டிப்பதாக கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையற்ற சுதந்திரத்தை, இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது” என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தென்னிலங்கையின் சிங்கள தேசியவாத அரசியல்வாதியான உதய கம்மன்பில, “கிழக்கில் சிங்களக் கிராமம் ஒன்றின் ஊடாக புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகனப் பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தைத் தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கை.” என விமர்சித்துள்ளதாக தென்னிலங்கையின் தமிழ் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

“புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். புலிகள் அமைப்பின் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் திலீபனின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வடக்குக்குப் பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்? எவரேனும் அதிகாரி அனுமதி வழங்கி இருப்பாரானால் அவர் நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாக மீறியவராகக் கருதப்படுவார்.” என அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உதய கம்மன்பிலவின் கட்சியின் சார்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர் அஞ்சன உதாரவினால் இந்த முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அஞ்சன உதார, எம்.பி செல்வராசா கஜேந்திரன் இரண்டு தவறுகளை இழைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

“செல்வராசா கஜேந்திரன் இரண்டு பாரிய தவறுகளை இழைத்துள்ளார். ஒன்று அரசியல் யாப்பின் 157 (அ) பிரிவிற்கு அமைய, பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய பிரிவு,  பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல், பிரிவினைவாதத்தை பரப்புதலை எம்.பி கஜேந்திரன் மேற்கொண்டுள்ளார். அதேபோல் ஐ.சி.சி.பி.ஆர்.சட்டத்திற்கு கீழ் இனங்களுக்கு இடையில் ஒற்றுமைமைய இல்லாமல் செய்ய,  எல்.டி.டி.ஈ தீவிரவாத அமைப்பினர் செய்த படுகொலைகளால் கிழக்கில் வாழும் சிங்கள மக்களே கூடுதலான, பாதிப்பினை வேதனையை அனுபவித்தார்கள்.  சிங்கள மக்களும் வாழும் பிரதேசம் ஊடாக, திலீபன் என்ற தீவிரவாத தலைவரை நினைவுகூருவது, பேரணியாக செல்வதன் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் சமாதானமின்னை, மோதல் ஏற்பட முடியும்.”

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவுவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து கடந்த 15ம் திகதி ஆரம்பமான திலீபனின் நினைவுகளை தாங்கிய ஊர்தியானது கடந்த (17) திருகோணமலை வழியாக பயணித்த போது ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த குழுவினர் குறித்த ஊர்தி மீதும் அதில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles