NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாதியர் கல்லூரிகளை மூட வேண்டிய நிலை குறித்து அவதானம்!

தாதியர் கல்லூரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு மாணவர்களை பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 4 வருடங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து தாதியர் கல்லூரிகளுக்குச் சேர்த்துக்கொள்ளும் மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி தெரிவித்துள்ளார்.

2018/2019 ஆம் ஆண்டுக்கான தாதியர் கல்லூரிகளில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்ட போதிலும் 2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தாதியர் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகேவிடம் கருத்து தெரிவித்த போது, தாதியர் கல்லூரிகளுக்கான தாதியர் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2018/2019ஆம் ஆண்டுக்கான தாதியர் கல்லூரிகளில் சேரத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்தக் காலப்பகுதியில் கொவிட் தொற்று இருந்தமையினால் ஆட்சேர்ப்பு தாமதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான தாதியர் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் வாரங்களில் தாதியர் பணிக்கு தகுதி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் பட்டியல் குறித்த பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாதியர் சேவையில் தற்போது 2,400 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகே மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles