NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தனது கணவரின் உடல்நிலை மோசமாகி வருவதால், அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி முருகனின் மனைவி நளினி தலைமைச் செயலர், திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் மற்றும் முருகனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டதை அடுத்தே முருகன் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டார்.

Share:

Related Articles