உயர் நீதிமன்றம் தனது பிரச்சினையில் மிகவும் அனுதாபத்துடனும் நியாயத்துடனும் நடந்து தனக்கு உரிய தீர்வு வழங்கும் என்று நம்புவதாக, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு தெரிந்த வரையில் நான் இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவன் என தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததுடன், எனது விண்ணப்பத்தை நிராகரிக்க உரிமையில்லை என்றும் கூறி, அதனை என்னிடம் வழங்கியிருந்தனர்.
அதனை தொடர்ந்து நான் ஏ.ஜி அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். விண்ணப்பங்களை விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து எனக்கு எதிராக 2 எதிர்ப்பு பத்திரங்கள் வந்திருந்தது. ஆனால், அந்த பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. எனக்கு தெரிந்த வகையில், எனக்கு குடியுரிமை உள்ளது. கொச்சிக்கடையில் உள்ள எனது மைத்துனனின் வீட்டுக்கு எனது வாக்காளர் அட்டை கிடைக்கப்பெற்றிருந்தது.
எனினும், வாக்களிக்க எனக்கு கிடைக்கவில்லை. காரணம், நான் அந்த சமயத்தில் கொரியாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். இந்த அனைத்தையும் விடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, எனக்கு தண்டனை வழகங்கப்பட்டது. அந்த தண்டனையை நான் ஒரு வருடமும் 8 மாதங்களும் அனுபவித்தேன்.
ஆனால், இந்த குற்றத்திற்காக நான் சிறையில் இருக்கவில்லை. பாராளுமன்றத்தில் கூறவிருந்த கதையை வெளியே கூறியதற்காக தான் சிறை தண்டனையை அனுபவித்தேன். கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெறல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக சிறை தண்டனையை அனுபவிக்கவில்லை.
என்னை போன்ற தீவிர அரசியலில் ஈடுபட்ட ஒருவரை யாரும் குழப்ப முடியாது. ஆனால், அரசியல் களத்தில் ஏனைய கட்சிகள் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்கு உயர்நீதிமன்றம் தகுந்த பதிலை அளிக்கும் என நம்புகிறேன்.