(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை துறைமுக அதிகாரசபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 914 பணியாளர்கள் இருந்த போதிலும் அதன் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அண்மையில் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே அது இவ்விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டிலும் மேலதிக நேர கொடுப்பனவுகளாக பணம் வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அதிகப்படியான ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்வாகத் துறைக்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, 3 மாதங்களின் பின்னர் அதிகாரசபை மீண்டும் அழைக்கப்படும் போது ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினையை தீர்க்குமாறு கோப் குழு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து வாயில்கள் மற்றும் பிணைக்கப்பட்ட களஞ்சியசாலைகளை உள்ளடக்கிய சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படாதது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
தேவையான இடங்களுக்கு படிப்படியாக சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 538 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சுமார் 400 கெமராக்கள் பொருத்தப்படும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், 2022ஆம் ஆண்டில் உணவுக்காக துறைமுக அதிகாரசபை 1.2 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி சிற்றுண்டிகளுக்காக 498 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.